

குன்னூர்: கனமழை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென, பர்லியாறு ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி, அவ்வப் போது கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி, குன்னூர், பர்லியாறு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. பர்லியாறில் நேற்று முன்தினம் 78 மி.மீ., நேற்று காலை வரையில் 24 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கனமழை காரணமாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை உட்பட பர்லியாறு ஊராட்சிக்குட்பட்ட பர்லியாறு கிராமத்தில் மண் சரிவு ஏற்பட்டதுடன், இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. வீடுகளுக்கு பின்புறம் மண் சரிந்ததால், மண் குவியல் வீடுகள் மீது விழுந்துள்ளது. இதை வீட்டின் உரிமையாளர்கள் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பர்லியாறு ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து, சேதமடைந்த குடியிருப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.