Published : 12 Dec 2023 04:06 AM
Last Updated : 12 Dec 2023 04:06 AM

புதுச்சேரியில் ப்ரீபெய்டு மின் திட்டத்தை கைவிடக்கோரி 1 லட்சம் குடும்பத்தினரிடம் கையெழுத்து: முதல்வரிடம் வழங்க மார்க்சிஸ்ட் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயம் மற்றும் ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி, 1 லட்சம் குடும்பங்களிடம் கையெழுத்து பெற்று, அதனுடன் இணைக்கப்பட்ட மனுவை பேரணியாக எடுத்துச் சென்று, புதுச்சேரி முதல்வரிடம் நாளை ஒப்படைக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலர் ராஜாங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு: மத்திய அரசு பேரழிவு திட்டங் களை எல்லாம் புதுச்சேரியில் அமலாக்கி வருகிறது. அந்த வரிசையில் மின்துறையை தனியாருக்கு விற்கவும், முன்பணம் செலுத்தி மின்சாரம் பெறுகின்ற திட்டத்தையும் அமல்படுத்த உள்ளனர்.

புதுச்சேரி மின்துறைக்கு 285 ஏக்கர் நிலம், 100-க்கும் அதிகமான கட்டிடங்கள், அலுவலகங்கள், 3,000 ட்ரான்ஸ் பார்மர்கள், 10 சப் - ஸ்டேஷன்கள், 74 ஆயிரம் மின் கம்பங்கள், 40 ஆயிரம் கி.மீ மின் கம்பிகள், மின் நுகர்வோரின் வைப்புத் தொகை ரூ.500 கோடி, ஆக மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின் துறையை தனியாருக்கு விற்க மத்திய மோடி அரசும், புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், அமைச்சர் பெரு மக்களும் துடியாய் துடித்து வரு கின்றனர்.

மின்துறையை வாங்கப் போகும் அதானி போன்ற நிறுவனத்துக்கு ஆதரவாக பல்வேறு நூதன கட்டணங்களை விதித்து மக்கள் பணத்தை சுரண்டி வருகின்றனர். நிரந்தர சேவை கட்டணம், வீடுகளுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 30 ரூபாய், மற்றவைகளுக்கு 75 ரூபாய் என மாதந் தோறும் மின் கட்டணத்துக்கு மேல் கூடுதலாக கட்டணங்களை விதித்து மக்களை வஞ்சிக்கிறது புதுச்சேரி அரசு.

நாம் வீட்டைப் பூட்டியே வைத்தி ருந்தாலும், ஓரிரு மாதங்கள் வெளியூர் சென்றிருந்தாலும் இந்த கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. மின் துறையை தனியாருக்கு விற்பதன் ஒரு பகுதியாக மின் சாரத்தை சந்தைப் பொருளாக மாற்றவும், மக்கள் முன்பணம் செலுத்தி மின்சாரம் பெறுகிற கட்டாயத்தையும் ஏற்படுத்த உள்ளனர்.

மின் கட்டணம் உயரும்: ராஜஸ்தானைச் சேர்ந்த ஜென்ரல் பவர் இன்ப்ரா ஸ்டரக்சர் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து, இதற்கான ப்ரீபெய்டு மின் மீட்டர் வாங்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணம் இஷ்டம் போல் உயர்த்தப்படும். மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டிய கட்டாயமாக்கப்படுவதோடு, காலை, மாலை நேரங்கள் என ஒருநாளின் மிக முக்கிய நேரங்களில் மின்பயன்பாட்டுக்கு மிக அதிகப்படியான கட்டணமும் நடைமுறைப் படுத்த திட்டமிடுகின்றனர்.

இதன் மூலம், ‘பணம் இல்லாத வர்களுக்கு மின்சாரம் இல்லை’ என்ற நிலை ஏற்படும். விவசாயிகள், எளிய மக்களின் வீடுகள், குடிசைத் தொழில்களுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் ஏற்படும். மின்துறை தனியார்மயமானால், ‘அரசு ஊழியர்கள்’ என்ற தங்களது அந்தஸ்தை மின்துறை ஊழியர்கள் இழக்க நேரிடும்.

புதுச்சேரி இளை ஞர்களுக்கு மின் துறையில் அரசு பணி இல்லாமல் போகும். இத்திட்டங்களை கைவிட வலியுறுத்தி, கடந்த 30 நாட்களாக புதுச்சேரியின் அனைத்து பகுதி மக்களிடமும் நேரடியாகச் சென்று அபாயத்தை விளக்கி, குடும்பத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அவர் களிடமிருந்து கையொப்பங்களைப் பெற்றுள்ளோம்.

பொதுமக்களிடம் பெறப்பட்ட இந்த கையொப்பங்களுடன் கூடிய மனுவை, எங்கள் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் தலைமையில் புதுச்சேரி பெரியார் சிலை அருகில்இருந்து நாளை மாபெரும் பேரணியாக எடுத்துச் சென்று, புதுச்சேரி முதல்வரிடம் ஒப்படைத்து மக்களுக்கு எதிரான இந்தத் திட்டங்களை கைவிட வலியுறுத்தவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x