Published : 11 Dec 2023 05:39 PM
Last Updated : 11 Dec 2023 05:39 PM

2015 vs 2023 | “அன்று ரூ.5,000, இன்று ரூ.6,000...” - மீட்பு, வெள்ள நிவாரணத்தை ஒப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: “2015 வெள்ளத்தின்போது மத்திய அரசிடமிருந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோரிய நிவாரணத் தொகை ரூ.10,250 கோடி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்போது வழங்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ.5,000. ஆனால், தற்போது மத்திய அரசிடம் ரூ.5,060 கோடி மட்டுமே கோரியுள்ள தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ.6,000 அறிவித்துள்ளது” என்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழைக்குப் பிறகு, சென்னை மாநகரம் இப்போது மீண்டெழுந்து வந்திருக்கிறது. அரசினுடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, முதல்வர் நேரடியாக மேற்கொண்ட ஆய்வு மற்றும் ஈடுபாட்டின் காரணமாக, சென்னை நகருக்கு வரவிருந்த ஒரு பேராபத்து தவிர்க்கப்பட்டு இருக்கிறது. புயலுக்குப் பிறகான நடவடிக்கைகளின் காரணமாக இன்று முழுமையாக இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது.

தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் அகற்றப்பட்டு பொதுமக்கள் இன்றைக்கு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சென்னை உட்பட 4 மாவட்டங்களிலும், முதல்வர் நிவாரணத் தொகையும் கூட அறிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், தமிழகத்தில் இருக்கக் கூடிய சில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

திமுக அரசு 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தபோது தமிழகம் கரோனாவில் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில், இந்த கரோனா பேரிடரை மிக திறமையாக கையாண்ட அரசாக, தமிழக அரசு இருந்தது. திமுக அரசைப் பொறுத்தவரையில், வடமாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அன்றைக்கு கங்கையில் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல், மக்கள் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். ஆனால், அப்படியான சூழலில்கூட, முதல்வர் தலைமையிலான திமுக அரசு கரோனா பேரிடர் நடவடிக்கைகளில் மிக சிறப்பாக பணியாற்றியது.

அனைத்துக் கட்சிக் குழுக்கள் அமைத்து, மாவட்ட வாரியாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் கண்காணித்தார். தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்டவை உடனடியாக தேவைப்படும் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஒருகட்டத்தில், கவச உடையணிந்து கரோனா வார்டுக்கு உள்ளே சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். டெல்லியில் உட்கார்ந்து கொண்டு மணி அடிக்கவோ, கைகளைத் தட்டவோ கூறாமல், களத்தில் இறங்கி முதல்வர் பணியாற்றினார். கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு திமுக அரசு.

அதேபோல்தான், மிக்ஜாம் பேரிடரின் போதும் திமுக அரசு முன்னணியில் இருந்து போராடியது. கரோனாவைப் போலவே, இந்தப் பேரிடர் சமயத்திலும் முதல்வர் முன்னணியில் இருந்தார். எங்களுக்கு வாக்களித்தவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்; வாக்களிக்காதவர்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என வருத்தம்படியாக எங்களது பணி நிச்சயமாக இருக்கும் என்று முதல்வர் ஏற்கெனவே கூறியிருந்தார். அதுபோலவே, இந்த வெள்ளத்தின்போதும், அரசியல் எல்லாம் பார்க்காமல், அனைவருக்கும் திமுக அரசு ஒட்டுமொத்தமாக களமிறங்கி பணியாற்றி உள்ளது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரையில், 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெரு்ககை அன்றைய ஆட்சியாளர்கள் எப்படி மோசமாக கையாண்டனர் என்பதையும், 2023-ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலமாக உயிரிழப்புகள் மற்றும் சேதாரங்களை தவிர்த்துள்ளது குறித்து இன்று வெளியான கட்டுரை ஒன்று தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. குறிப்பாக, ஏரிகளின் நீர்மட்டத்தை சரியாக கையாண்டு, தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்பட்டு உயிர்ச் சேதம் தடுக்கப்பட்டுள்ளதை இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய வேலைகளை எல்லாம் செய்யாமல், யாருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமோ அவர்களுக்கு அரசு நிவாரணங்களை வழங்கி வருகிறது. 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனக் கோரி அன்றைய முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். தமிழகத்தில் 2015-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்த்து அமெரிக்கா போன்ற நாடுகளே சென்னைக்கு வரவேண்டாம் என எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகள்தான், சென்னைக்கு உதவி செய்வதற்காக ஓடோடி வரக்கூடிய சூழல்தான் இருந்தது.

அன்றைய காலக்கட்டத்தில் நிவாரணப் பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை என்பதை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால், தற்போது மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழைநீர் வடிகால் பணிகளை ஏற்கெனவே அரசு மும்முராக மேற்கொண்டது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, நிவாரணப் பணிகளுக்காக, அன்றைய முதல்வர் ஜெயலலிதா ரூ.10,250 கோடி நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், தற்போது தமிழக அரசு ரூ.5,060 கோடிதான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ரூ.10,250 கோடி நிதி கோரியிருந்த ஜெயலலிதா பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 நிவாரணமாக வழங்கியிருந்தார். ஆனால், தற்போது ரூ.5,060 கோடி கோரியுள்ள முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிவாரணத் தொகை ரூ.6000 என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த 6,000 ரூபாயும்கூட மத்திய அரசுதான் வழங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். வெள்ளம் வந்தபோது கமலாலயத்தின் கதவைத் திறக்காமல் உள்ளே பூட்டிக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு வெளியே வந்து வெள்ளம் வடிந்த பிறகு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று பேட்டிக் கொடுத்துவிட்டு சேலத்துக்கு சென்றுவிட்டார். ஆனால், இப்போது அவர்கள் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அண்ணாமலை, மத்திய அரசிடம் பேசி தமிழக அரசு கேட்டுள்ள நிதியைப் பெற்றுத்தர வேண்டும். காரணம், ஏற்கெனவே நமது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைக் கேட்டு மத்திய அரசிடம் நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக தமிழகம், கர்நாடகா, மகராஷ்டிரா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பீட்டளவில் பார்க்கிறபோது நாம் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x