

மதுரை: மக்கள் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் பல ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சியில் 4 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளில் இருந்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த 4 தொட்டிகளும் 1999-வது ஆண்டில் கட்டப்பட்டவை. தற்போது மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. தொட்டி அருகே அரசுப் பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளன. இதனால் சேதமடைந்த நிலையில் உள்ள 4 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளை இடித்து புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை கட்ட உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: "கிராம மக்கள், மாணவர்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் பொதுவாகவே அதிக அக்கறை செலுத்த வேண்டும். குடிநீர் தொட்டிகள், கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து நீதிமன்றம் ஆராய்ச்சி செய்ய முடியாது. எனவே மேல் நிலை நீர் தேக்க தொட்டியின் உறுதித்தன்மை குறித்து தொழில் நுட்ப நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்ய வேண்டும்.
தொழில்நுட்ப நிபுணர்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொட்டிகள் உறுதியாக இருந்தால் அவற்றை இடிக்க வேண்டியதில்லை. தொழில்நுட்ப வல்லுநர்கள் 3 மாதத்தில் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில் உரிய முடிவெடுக்க வேண்டும்." இவ்வாறு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.