முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு பாரதி விருது; பாரதியாரை முழுமையாக அறிய அதிக ஆய்வுகள் தேவை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னையில் நடைபெற்ற பாரதி விழாவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமாருக்கு, பாரதி விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். உடன் வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே.ரவி, எழுத்தாளர் சிவசங்கரி, பாரதிய வித்யாபவன் இயக்குநர் ராமசாமி மற்றும் சோபனா ரேமஷ், பர்வின் சுல்தானா. 
படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னையில் நடைபெற்ற பாரதி விழாவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமாருக்கு, பாரதி விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். உடன் வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே.ரவி, எழுத்தாளர் சிவசங்கரி, பாரதிய வித்யாபவன் இயக்குநர் ராமசாமி மற்றும் சோபனா ரேமஷ், பர்வின் சுல்தானா. படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு பாரதி விருது வழங்கிய விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதியாரை முழுமையாக அறிய அதிக ஆய்வுகள் தேவை என்று கூறினார். பாரதிய வித்யா பவன் மற்றும் மயிலை வானவில் பண்பாட்டு மையம் சார்பில் மகாகவி பாரதியாரின் 131-வது பிறந்த நாளையொட்டி 30-ம் ஆண்டு பாரதி திருவிழா சென்னையில் அடையாறில் உள்ள மத்திய கைலாசம் கோயிலில் கடந்த 9-ம் தேதி தொடங்கப்பட்டது. விழாவின் 2-வது நாளான நேற்று, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமாருக்கு, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி விருது வழங்கி கவுரவப்படுத்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

இலக்கியக் கலைஞர்களின் பார்வை நம்மிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டுக் காணப்படும். அவர்கள் உலகை வேறுவிதமாக காண்கின்றனர். மகாகவி பாரதியார் சிறந்த கவிஞர் மட்டுமின்றி, சிறந்த தேசியவாதி ஆவார். நான் தமிழகத்துக்கு வந்ததும் 2000-ம் ஆண்டு முதல் 2020 வரையிலான பல்கலைக்கழகங்களின் பிஎச்.டி ஆராய்ச்சி விவரங்களைக் கேட்டறிந்தேன். அதன்படி, 20 ஆண்டுகளில் மனிதநேயம் தொடர்பாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் செய்யப்பட்டிருப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இவற்றில் மிகக் குறைந்த அளவே பாரதியார் தொடர்புடைய ஆராய்ச்சிகள் இருந்தன. இதனால் பாரதியாரின் வரலாறு நம்முடையை நினைவில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறதோ என்றுகூட எண்ணத் தோன்றியது.

தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றியப் பங்கு அளப்பறியது. இதைப் பற்றி கருத்து சொல்ல எனக்குத் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இன்னும் பாரதியார் பற்றி முழுமையான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை என்றும், ஆவணப்படுத்தப்படவில்லை என்றும் நான் நம்புகிறேன். மகாகவி பாரதியாரின் பங்களிப்பைப் புரிந்துகொள்வதற்கும், பாராட்டுவதற்கும், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் அதிக ஈடுபாட்டுடன் கூடிய ஆய்வுகள் அதிகம் தேவை. இவ்வாறு அவர் பேசினார். விருது பெற்ற விஜயகுமார் பேசும்போது, “அப்துல் கலாம், நம்பி நாராயணன் போன்றோர் பெற்ற விருதை, நானும் பெற்றிருப்பதை கவுரவமாக கருதுகிறேன்.

ஆற்றல் மிகுந்த படையானது எப்போதும் என்னைச் சுற்றி இருந்ததே என் துணிவுக்குக் காரணமாக இருந்தது. தமிழக காவல் துறையின் ஒரு அங்கமாகப் பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன்.” என்றார். நிகழ்வில், வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி, எழுத்தாளர் சிவசங்கரி, பாரதிய வித்யா பவன் இயக்குநர் ராமசாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஷோபனா ரமேஷ், பர்வீன் சுல்தானா, முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in