

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7,532 கோடியை கடந்த ஜூன் மாதம் 22 மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது. இதில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.450 கோடி மட்டுமே. 6 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை, ஏதோ புயல் பாதித்த பிறகு தமிழகத்துக்கு வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய மோடி அரசும், இங்குள்ள பாஜகவினரும் முனைந்திருக்கிறார்கள். கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிக கனமழை பெய்து பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழகத்துக்கு இதுவரை நிவாரண நிதி ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.450 கோடியை மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு பொய் கணக்கு காட்டுகிறார்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, இந்த உண்மை நிலவரத்தை மூடி மறைத்துவிட்டு, பொறுப்பற்ற முறையில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்திக் கொண்டிருக்கிறார். வெள்ள நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்து மக்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது தமிழக அரசு. இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொய் சொல்வது ஒன்று மட்டுமே பாஜகவின் தலைவர் முதல் தொண்டர் வரை பிழைப்பாக இருக்கிறது. இவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.