Published : 11 Dec 2023 06:08 AM
Last Updated : 11 Dec 2023 06:08 AM

தமிழகத்தில் 35 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்: தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை

சேலத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க பவள விழாவில் பேசினார் லாரி உரிமையாளர் சம்மேளன மாநிலத் தலைவர் தனராஜ். உடன், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண் முகப்பா உள்ளிட்டோர்.படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் செயல்படாமல் உள்ள 35 சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக அறிவித்த நிலையில், இதுவரை அவை அகற்றப்படவில்லை.உடனடியாக சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா கூறினார். சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 75-வது ஆண்டு பவள விழா நேற்று நடைபெற்றது. மாநில சம்மேளனத் தலைவர் தனராஜ் தலைமை வகித்தார். தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் தலைவர் மதன், தெலங்கானா மோட்டார் டிரான்ஸ்போர்ட் துணைத் தலைவர் ஜவகர் உள்பட பல்வேறு மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, டீசலுக்கு ரூ.5 குறைப்பதாகவும், செயல்படாமல் உள்ளசுங்கச்சாவடிகளை அகற்றுவதாகவும் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவில் 11 மாநிலங்களில் டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் டீசல் விலை குறைக்கப்படவில்லை.

அதேபோல, தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, தமிழகத்தில் செயல்படாமல் உள்ள 35 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளில் ஒட்டக்கூடிய ஒளிரும் பட்டையை விற்க பல்வேறு மாநிலங்களில் 11 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 5 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் வாங்குமாறு நிர்பந்தப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் அதிகாரிகள், எல்லையைக் கடக்கும் லாரிகளிடம் லஞ்சம் கேட்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில், எதற்காக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டும்.

லஞ்சம் கேட்டால் போராட்டம்: வரும் 25-ம் தேதி முதல் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், நிச்சயம் தர மாட்டோம். அதையும் மீறி வற்புறுத்தினால், வாகனத்தை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபடுவோம். விரைவில் நடைபெற உள்ள அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்து, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பாகூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x