

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில், பர்லியாறு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. வடகிழக்குப் பருவமழை தீவிரமாகி, அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி, குன்னூர், பர்லியாறு பகுதிகளில் கனமழை பெய்தது. குன்னூர் அருகேயுளள எடப்பள்ளி பகுதியில் 104 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியது. இதனால், குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
விடுமுறை நாளான நேற்றுசுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகம் இருந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்நிலையில், குன்னூரில் இருந்து நேற்றுகாலை 9 மணியளவில் மேட்டுப்பாளையம் சென்ற மத்திய இணைஅமைச்சர் எல்.முருகனின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக மண் குவியலை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் போக்குவரத்து சீரானது. மழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடும் மேகமூட்டம் நிலவியது. இதனால், பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்து காணப்பட்டது.