Published : 11 Dec 2023 05:45 AM
Last Updated : 11 Dec 2023 05:45 AM
அரூர்: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் கூறினார். தருமபுரி மாவட்டம் அரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: புயல் மழையால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கான நிவாரணப் பணிகள் போதுமானதாக இல்லை என்று புகார் எழுந்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரண நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
வரும் காலங்களில் இதுபோன்ற அவலம் ஏற்படாமல் இருக்க, நிரந்தரத் தீர்வு காணவேண்டும். தமிழகத்தில் பரவலாக பல பகுதிகளில் சாதியக் கொடுமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசின் நடவடிக்கை தீவிரமாகவும், கடுமையாகவும் இல்லாததே இதற்குக் காரணம். பல இடங்களில் ஆளுங்கட்சியில் உள்ளவர்களே இதுபோன்ற குற்றங்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது. பத்து அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை பட்டியலின மக்கள் தொகை குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.மக்கள்தொகை அதிகரித்துள்ளதால் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT