Published : 11 Dec 2023 04:02 AM
Last Updated : 11 Dec 2023 04:02 AM

கன மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த காண்டூர் கால்வாய் பகுதியில் சீரமைப்பு பணி

உடுமலை: கன மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த காண்டூர் கால்வாய் பகுதியில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதுடன், பணிகள் முடியும் வரை கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்திவைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) மூலமாககோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4.30 லட்சம் ஏக்கர் நிலம் பயனடைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள ஆனைமலை குன்றுகளில் கிடைக்கும் மழை நீரை ஆதாரமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிஏபி தொகுப்பணைகளில் சேகரமாகும் மழை நீர், சமமட்ட ( காண்டூர் ) கால்வாய் மூலமாக ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளில் நிரப்பப்பட்டு, பின் பாசனத் தேவைக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், 2 தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம், காண்டூர் கால்வாயை ஒட்டிய 2 இடங்களில் மண் அரிப்பு, நிலச்சரிவுக்கு காரணமாக அமைந்தது. அதன்படி, கால்வாயின் 37.350 கி.மீ. முதல் 37.550 கி.மீ.-க்கு இடைப்பட்ட பகுதியில், கால்வாயை ஒட்டிய 95 மீட்டர் நீளமுள்ள சாலை அடியோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், மறுநாள் அதிகாரிகள் அங்கு வெள்ள சேதத்தை ஆய்வு செய்தனர். பராமரிப்பு பணிகள் காரணமாக திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 8-ம் தேதி மழை பெய்துள்ளது. சூப்பர் பாஸேஜ் மழை நீர் வடிகால்களையும் தாண்டி மழை நீர் பெருக்கெடுத்துள்ளதே இதற்கு காரணம். நல்வாய்ப்பாக கால்வாயின் மதில் சுவருக்கு எந்த வித சேதமும் இல்லை. கான்கிரீட் சுவருக்கு ஆதரவாக இருந்த பகுதிதான் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நல்லார் பகுதியிலுள்ள ஷட்டர் மூலமாக உடனடியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

சீரமைப்பு பணிகள் வரும் 14-ம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-ம் மண்டல பாசனத்துக்கு 2-ம் சுற்றுக்கான தண்ணீர் விநியோகிக்க வேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது. அதற்காக காண்டூர் கால்வாய் மூலமாக அணையில் தண்ணீரை சேமிக்க வேண்டியதும் அவசியம். பிஏபி திட்டத்தை பொருத்தவரை, இது பேரிடராகவே கருதப்படுகிறது.

இதனால், இன்று (டிச.11) ஆட்சியர், முதன்மை பொறியாளர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகே பணிகள் எப்போது நிறைவடையும், மீண்டும் எப்போது தண்ணீர் திறக்கப்படும்? 4-ம் மண்டலத்துக்கான 2-ம் சுற்று நீர் விநியோகத்தில் ஏதேனும் மாற்றம் உண்டா என்பது உள்ளிட்ட விவசாயிகளின்பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்’’என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x