

சென்னை: புயல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4-ம் தேதி அதிகனமழை பெய்தது. பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பணியாளர்கள் தங்கும் இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால், கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எனினும், சுரங்கம் தோண்டும் பணிகள் மெதுவாக நடைபெற்றன. தற்போது, பெரும்பாலான இடங்களில் சீரமைப்புப் பணிகள் முடிந்துள்ளதால் 8 நாட்களுக்குப் பிறகு பணிகள்மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.