Published : 11 Dec 2023 06:10 AM
Last Updated : 11 Dec 2023 06:10 AM

சென்னை வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக திருப்புகழ் குழு பரிந்துரையை செயல்படுத்தியது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக திருப்புகழ் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தியது குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் பெய்த தொடர் மழை ஓய்ந்து ஒரு வாரமாகியும், பெரும்பான்மையான பகுதிகளில் இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை. மழைநீரும், கழிவுநீரும் சூழ்ந்த பகுதிகளில் உணவும், உறக்கமும் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அரசு நிர்வாகம் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

சென்னையில் பெய்த தொடர் மழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் தங்களின் வாழ்நாளில் இதுவரை அனுபவிக்காத துயரங்களை அனுபவித்த மக்களுக்கு, அதற்கான காரணம் இயற்கைப் பேரிடரா அல்லது அதை சமாளிக்கத் தெரியாத தமிழக அரசா என்பதை அறிந்து கொள்ள அனைத்து உரிமைகளும் உண்டு. சென்னையில் மழை வெள்ளத்தைத் தடுக்க திருப்புகழ் குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த வேண்டும் என்று பாமக கடந்த சிலமாதங்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அரைகுறையாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்ததைத் தவிர, திருப்புகழ் குழுவின் எந்தப் பரிந்துரையையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், திருப்புகழ் குழுவின் அறிக்கைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறி வருகிறது. இதுஅப்பட்டமான பொய். திருப்புகழ் குழு அறிக்கை செயல்படுத்தப்பட்டதாக கூறும் அமைச்சர்களில் பலருக்கு அந்த அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்பதுகூட தெரியாது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதியே திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதற்குப் பிறகு 10 மாதங்களாகியும் அந்தஅறிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை. அதன்பின் 3 முறை சட்டப்பேரவை கூடியும், அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை.

சென்னை மாநகருக்கான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, திருப்புகழ் குழுவில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் எத்தனை, அவற்றில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் எத்தனை என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நடவடிக்கை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x