Published : 31 Jan 2018 08:14 AM
Last Updated : 31 Jan 2018 08:14 AM

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா மீது புகார் கொடுத்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது புகார் தெரிவித்தவர்களிடம், அவரது வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் செயலாளர்களில் ஒருவராக இருந்த கே.என்.வெங்கட்ரமணன், விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகினார்.

2001 முதல் 2006 வரையிலும், பின்னர் 2011-ம் ஆண்டிலும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் செயலாளராக பணியாற்றியவர் கே.என்.வெங்கட்ரமணன். 2012-ம் ஆண்டில் அவரது பதவிக்காலம் முடிந்தது. ஆனால் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்ததால் மேலும் 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றபின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும், பின்னர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரையிலும் ஷீலா பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து தமிழக அரசின் செயல்பாடு தொடர்பாக முக்கிய முடிவுகளை வெங்கட்ரமணனும் எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகியபோது தமிழக அரசின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து வெங்கட்ரமணனும் பதவி விலகினார்.

இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு வெங்கட்ரமணன் நேற்று விசாரனைக்கு ஆஜரானார். காலை 10.30 முதல் மதியம் 12.30 மணி வரை அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். பின்னர் வெளியே வந்த வெங்கட்ரமணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஜெயலலிதா குறித்து சில கேள்விகளை கேட்டனர். மீண்டும் விசாரணைக்கு ஆஜராக கூறியுள்ளனர்’’ என்றார்.

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது புகார் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்திடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தார். அதைத் தொடர்ந்து சசிகலா மீது புகார் தெரிவித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திடம் விளக்கம் அளித்தவர்களில் 22 பேர் சசிகலா மீது புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்த விவரங்கள் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த 22 பேரிடமும் விசாரணை நடத்த சசிகலா தரப்புக்கு 12 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்த மாட்டார். பிப்ரவரி 12-ம் தேதி முதல் மீண்டும் நீதிபதியின் விசாரணை தொடங்குகிறது.

ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக இருந்த ஐயப்பன் பிப்ரவரி 12-ம் தேதியும், சசிகலாவின் உறவினர் கார்த்திகேயன் பிப்ரவரி 15-ம் தேதியும் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் உள்ள ஆவணங்களை கொடுக்கும்படி, அவருக்கு புதிதாக ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x