Last Updated : 10 Dec, 2023 04:41 PM

 

Published : 10 Dec 2023 04:41 PM
Last Updated : 10 Dec 2023 04:41 PM

உடுமலை பகுதிகளில் கனமழை - காண்டூர் கால்வாயில் பெரும் சேதம் தவிர்ப்பு

உடுமலை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழை, குறிப்பிட்ட நேரத்தில் குறைந்ததால் காண்டூர் கால்வாயும், ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களும் தப்பியது தெரியவந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்த கன மழையால் காண்டூர் கால்வாய் ஒட்டிய பகுதிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு திறக்கப்பட்டுள்ள நீருடன், மழை நீரும் கலந்ததால் கால்வாய் நிரம்பி வழிந்தபடி சென்றது.

மலைகளில் இருந்து கிடைக்கும் மழைநீர் செல்ல ஏதுவாக காண்டூர் கால்வாயின் மேல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சூப்பர் பாஸேஜ் திட்ட வடிகால்கள் வழியே பாய்ந்த மழை நீரால், வரப்பள்ளம் என்ற இடத்தில் சுமார் 100 மீட்டர் நீளம், 40 மீட்டர் ஆழத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. காண்டூர் கால்வாயின் கான்கிரீட் சுவருக்கு உறுதுணையாக இருந்த கருங்கல் சுவர் உட்பட அங்கிருந்த மரங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, மழைப்பொழிவு குறைந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: காண்டூர் கால்வாயை ஒட்டி சுமார் 5000 ஏக்கர் பரப்பில் தென்னை, மா, பாக்கு உள்ளிட்ட மர பயிர்களும், இதர வேளாண் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் காண்டூர் கால்வாயை அடைவது வழக்கமான செயல். அத்தகைய காலகட்டங்களில் கால்வாயின் பாதுகாப்பு கருதி, மழைநீரை வெளியேற்ற வரப்பள்ளம், கோமாளியூத்து பள்ளம் ஆகிய இடங்களில் ஷட்டர் வைக்கப்பட்டுள்ளது.இந்த ஷட்டர்களை திறப்பதன் மூலமாக கிடைக்கும் மழை நீர் வலைய பாளையம் குளத்தை வந்தடையும்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ.70 கோடி செலவில் காண்டூர் கால்வாய் புனரமைக்கப்பட்டபோது, மேற்படி 3 இடங்களில் இருந்த ஷட்டர்கள் திறக்க முடியாத அளவுக்கு கான்கிரீட் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது.அதிகாரிகளின் இந்த தவறான நடவடிக்கையை அப்போதே எதிர்த்தோம். ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கால்வாய் கட்டப்பட்டபோது இருந்த பொறியாளர்களின் தொலை நோக்கு பார்வையில் தான் இத்திட்டம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது பணிபுரியும் அலுவலர்களால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேற்படி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்குகூட யாரும் செல்ல முடியாத அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழையளவு இன்னும் சற்று கூடுதலாக பெய்திருந்தாலும், காண்டுர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கும். அதிலிருந்து தண்ணீர் வெளியேறியிருந்தால், ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி நிலம் மண்ணோடு, மண்ணாக அரிக்கப்பட்டிருக்கும்.

நல் வாய்ப்பாக அசம்பாவிதங்கள் நூலிலையில் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும். அத்துடன் மழைக் காலங்களில் 3 இடங்களில் ஷட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேற்று சென்று ஆய்வு செய்து கூறும்போது, ‘‘நள்ளிரவில் கன மழை கொட்டியதால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கரை வரையிலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக கால்வாய் சுவருக்கு சேதம் ஏற்படவில்லை. ஆய்வுக்கு பிறகு முழு விவரமும் தெரியவரும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x