Published : 10 Dec 2023 03:35 PM
Last Updated : 10 Dec 2023 03:35 PM
திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் நேற்று அதிகாலையில் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் நாற்றுகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலியில் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணிவரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. திருநெல்வேலி மேலப்பாளையம் உழவர் சந்தைக்கு பின்புறம் மற்றும் குறிச்சி பகுதிகளில் தாழ்வான பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்கும் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதியுற்றனர்.
வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் இப்பகுதிகளில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. வண்ணார்பேட்டை தெற்பு புறவழிச் சாலையில் தொடர் மழை காரணமாக கழிவு நீரோடையிலிருந்து தண்ணீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழையால் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம், சந்திப்பு பழைய பேருந்து நிலையம். மத்திய சிறை எதிர்புறம், டவுன் வடக்கு ரத வீதி உள்ளிட்ட மாநகரில் முக்கிய இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. புதிய பேருந்து நிலையம், ஆயுதப் படை காவலர் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருநெல்வேலியில் பெய்த பலத்த மழையால் டவுன் பாறையடி பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாற்று நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டன.
நடவுக்காக தயார் நிலையில் இருந்த நெல் நாற்றுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுபோல் ஒருசில இடங்களில் சமீபத்தில் நடவு செய்யப்பட்டிருந்த நாற்றுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்தனர். பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் அறிவித்தார்.
மழையளவு: திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 90 மி.மீ., திருநெல்வேலி- 44.20 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு ( மி.மீட்டரில் ): அம்பா சமுத்திரம்- 49, சேரன் மகாதேவி- 68.60, மணி முத்தாறு- 58.80, நாங்குநேரி- 2.60, பாளையங்கோட்டை- 10, பாபநாசம்- 31, திருநெல்வேலி- 17.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் சிவகிரியில் 9 மி.மீ., சங்கரன்கோவிலில் 3 மி.மீ., கருப்பாநதி அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. நேற்று அதிகாலையில் இருந்து மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்தது. சில இடங்களில் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை தொடர்ந்து மழை பெய்தது. மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் துரை.ரவிச் சந்திரன் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT