மின் விபத்தில் சிக்கிய நிலையிலும் தடைபடாத மக்கள் சேவை: திமுக கவுன்சிலருக்கு குவியும் பாராட்டு
சென்னை: மின் விபத்தில் சிக்கிய நிலையிலும், திமுக கவுன்சிலரின் தடைபடாத மக்கள் சேவையை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி. இவர், சென்னை மாநகராட்சியில் 99-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். புயல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தனது வார்டு முழுவதும் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாட்ஸ் - அப் குழு: இந்நிலையில், அவருக்கு நேற்று அதிகாலை மின் விபத்து ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, அவர் தனது வாட்ஸ் - அப் ஸ்டேடஸில், ‘அதிகாலை 4.30 மணி அளவில் எனது இல்லத்தில் ஏற்பட்ட மின்சாரக் கசி-வின் காரணமாக மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனை செல்ல உள்ளேன்.
எனவே, ஏதேனும் குறைகள் இருந்தால் குழுவில் பதிவிடவும், மாநகராட்சி அதிகாரிகள் அதை சரி செய்து தருவார்கள். மருத்துவ ஆலோசனை பெற்று மீண்டும் களத்தில் வந்து பணியாற்றுவேன்’ என பதிவிட்டிருந்தார். தான் பாதிப்புக் குள்ளாகிய போதும், தொடர் சேவை செய்யும் அவரது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
