Published : 10 Dec 2023 04:47 AM
Last Updated : 10 Dec 2023 04:47 AM

மழைநீர் வடியும் தொலைநோக்கு திட்டமிட வேண்டி தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்ட ‘கவிதை’

சென்னை: தமிழகத்தில் மழைநீர் வடியும் தொலைநோக்கு திட்டத்தை அரசுதிட்டமிட வேண்டுமென வலியுறுத்தி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக் கவிதையில் கூறியிருப்பதாவது

இது மழையின் தண்ணீர் கவிதையல்ல.... இது மக்களின் கண்ணீர் கவிதை....

என்னை.... உன்னை.... வளர்த்த சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது

மழை நின்ற பின்பும் தண்ணீர் வடியவில்லை...

மக்களின் கண்ணீர் வற்றவில்லை....

விடியல் இருக்கும் என்றார்கள்... தண்ணீர் வடியல் கூட இல்லையே...

அவகாசம் இல்லை என்று சாவகாசமாய் சொல்கிறார்கள்...

இன்றா இவர்களிடம் சென்னை இருக்கிறது...

அன்றே மேயராக சென்னையில் இருந்தவர்கள் தானே?

சிங்கப்பூராக ஆக்குகிறோம் என்றார்கள்...

பூராக தண்ணீர் வடியும் ஊராக கூட ஆக்கவில்லையே....

பம்பு வைத்து தண்ணீர் எடுக்கலையே....

பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே....

கூவத்தில் படகு விடுவோம் என்றார்கள்....

இன்று சென்னையே கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

குழிக்குள்ளும், புதருக்குள்ளும் மனித உடல்கள்....

பழிக்குள்ளாக்குகிறார்கள் இன்றைய மழையை....

பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள்....

ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்....

தண்ணீர் வடியும் காலம் தெரியாமல் பரிதவிக்கிறார்கள்....

பாலுக்கு அழும் குழந்தையை பார்த்திருக்கிறோம்....

இன்று பாலுக்காக குடும்பங்களே அழுவதை பார்த்து பரிதவிக்கிறோம்....

பொருளை இழந்து வாடும் மக்களுக்கு

மீண்டும் பொருள் கிடைக்க அருளைக்கொடு....

இன்று இந்தக் கொடுமையை தாங்கும் பலத்தை கொடு....

பின்பு மழையை தாங்கும் கட்டமைப்பை கொடு....

ஆண்டு கொண்டிருப்பவர் செய்ய தவறியதால்....

ஆண்டவனே உன்னை வேண்டுகிறேன்....

கூப்பிடு தூரத்தில் நான் இருந்திருந்தால்....

துயர் துடைக்க முடியவில்லை என்றாலும்....

கண்ணீர் துடைக்கவாவது ஓடோடி வந்திருப்பேன்....

அன்று வந்தது போல் படகோடவாது வந்திருப்பேன்....

நம் மாநில மழைக்காட்சி கண்டாலும்....

பணி மாநில ஆட்சிப்பணி இருப்பதால்....

தூரத்தில் இருந்தே உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன்....

இவ்வாறு அவர் கவிதை மூலம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x