Published : 10 Dec 2023 05:12 AM
Last Updated : 10 Dec 2023 05:12 AM

கோவையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகளில் தண்ணீர் புகுந்தது

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகையில் வாழைத் தோப்பில் தேங்கிய மழைநீர்.

கோவை/சென்னை: கோவையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 130-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

அவிநாசி சாலை அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதி, கிருஷ்ணசாமி சாலையில் உள்ள சோமசுந்தரா மில் சுரங்கப் பாதை, கிக்கானி பள்ளி பாலம், லங்கா கார்னர் ரயில்வே பாலம் ஆகியவற்றின் கீழ் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடைபட்டது.

ஆவாரம்பாளையம் பட்டாளம்மன் கோயில் வீதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளிலும், திருச்சி சாலை உப்பிலிபாளையம் ஆர்.வி.எல். காலனியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. நஞ்சுண்டாபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

உடையாம்பாளையம் கக்கன்நகரில் 3 பேர் சென்ற கார் வெள்ளத்தில் சிக்கியது. தகவலறிந்து வந்ததீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டனர். மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் மழைநீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீரை அகற்றும் பணியை துரிதப்படுத்தினர்.

மேட்டுப்பாளையத்தில் கனமழையால், மருதூர் ஊராட்சிக்குஉட்பட்ட ஏழுசுழி தடுப்பணை நிரம்பி தண்ணீர் கசிவு ஏற்பட்டது. அன்னதாசம்பாளையத்தில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் நீரில் மூழ்கின.

சிறுமுகை திம்மனூர் பகுதியில்குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறியதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கின. தோட்டத்தில் தங்கியிருந்த கருப்பன், கமலா தம்பதியையும், 6 பசுக்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அண்ணா நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

வானிலை அறிவிப்பு: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்.

இதனால் தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வரும் 15-ம்தேதி வரை சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச. 9-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 12 செ.மீ., கோவை விமான நிலையத்தில் 11 செ.மீ., ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம், பந்தலூரில் 10 செ.மீ., தேனி மாவட்டம் மஞ்சளாறு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x