Published : 10 Dec 2023 04:04 AM
Last Updated : 10 Dec 2023 04:04 AM

மழைநீர் வடிகால் பணிகள் | இபிஎஸ், சீமான் உடன் விவாதிக்க தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சீமானிடம் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக தமிழகம் முழுவதும் வாரம் தோறும் சனிக்கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 6 முகாம்கள் நடந்துள்ள நிலையில், 7-வது வாரமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்டத்தில் 679, திருவள்ளுர் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தலா 200, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 முகாம்கள் நடந்தன. சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் டாக்டர் ராதா கிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங்பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக,9 மாதம் தொடங்கி 15 வயது வரை குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம் ஆகும். நிவாரண பொருட்கள் வழங்கப்படும் எந்த இடங்களிலும் பொதுமக்கள் கோபமாக எங்களிடம் பேசுவதில்லை.

ஆனால் ஒரு சில இடங்களில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்களை எங்களிடம் கோபமாக வாக்குவாதம் செய்ய சொல்லி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர். அதுபற்றியெல்லாம் நாங்கள் கவலை கொள்ளவில்லை. இயல்பான அளவை காட்டிலும் இந்தாண்டு 12 மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது.

2015-ம் ஆண்டு பெய்த மழையை காட்டிலும் தற்போது 2 மடங்கு அதிகமான மழை பெய்துள்ளது. விமர்சனங்கள் செய்வதற்கு முன்பு, தமிழக அரசு மேற்கொள்ளும் பணிகளை கொஞ்சம்மனசாட்சியோடு எண்ணிப்பார்க்க வேண்டும். இரவு பகல் பாராமல் சென்னை மாநகராட்சி சார்பில் களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களின் மனம் புண்படாதபடியும் பேச வேண்டும்.

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சீமான், மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராகவே உள்ளோம். மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை நேரில் அழைத்துச் சென்று காட்ட தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவாதிக்க தயார்: சீமான் அறிவிப்பு - சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ண மூர்த்தி நகர்பகுதியில் வெள்ள நிவாரண உதவிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மழைநீர் வடிகால் பணிக்குரூ.4 ஆயிரம் கோடி செலவானது குறித்து ஒரே மேடையில் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வருகிறாரோ இல்லையோ, நான் செல்லத்தயார்.

6 மாதங்களில் மழைநீர் வடிகால் பணிகளை முடித்து விடலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கும் நிலையில், இரண்டரை ஆண்டுகளில் இந்த பணிகளை செய்திருக்க முடியாதா? எனவே, விவாதம் எங்கே, எப்போது என்று அமைச்சரே முடிவு செய்யட்டும். மழைநீர் வடிகால் கட்டியதற்கான வரை படத்துடன் வாருங்கள். நேரலையில் விவாதிப்போம். இவ்வாறு சீமான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x