Published : 10 Dec 2023 04:06 AM
Last Updated : 10 Dec 2023 04:06 AM

செங்கல்பட்டு சர்வீஸ் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் - அகற்ற மறுக்கும் உள்ளாட்சிகள்

சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு பகுதி சர்வீஸ் சாலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள்.படம்: பெ. ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழின் 'உங்கள் குரல்' தொலைபேசி வாயிலாக திம்மாவரத்தை சேர்ந்த மோகன் என்பவர் கூறியது: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு நீஞ்சல் மடு பகுதியில் உள்ள பைபாஸ் சாலையோரம் மர்ம நபர்கள் மீன் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை சாக்குமூட்டைகளில் கட்டி வந்து கொட்டு கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் சூழல் நிலவுகிறது.

ஆகவே அங்கு இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். சர்வீஸ் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், இறைச்சிக் கழிவுகளை சாப்பிட வரும் நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு சாலையில் ஓடி வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இங்கு கொட்டப்படும் குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இவ்வாறு தீவைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

மேலும் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் இறைச்சிக் கோழிகளை சாலையோரம் ஆங்காங்கே வீசி விட்டு செல்கின்றனா். இதனால், கோழிக் கழிவுகளில் புழுக்கள், பூச்சிகள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும் குப்பைகளுக்கு தீ வைப்பவர்கள் மீதும் செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த குப்பைகளை அகற்றுவது தொடர்பாக காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இடம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. செங்கல்பட்டு நகராட்சி பகுதியாகும். அவர்கள்தான் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். செங்கல்பட்டு நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, அவரும் இது எங்கள் பகுதி இல்லை.

இது திம்மாவரம் ஊராட்சி சார்ந்தது. ஊராட்சி நிர்வாகத்தினர் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக அந்த ஊராட்சி பகுதியில் வசிப்போரும், கடைக்காரர்களும்தான் இந்த பகுதியில் குப்பை போடுகின்றனர். எனவே அந்த ஊராட்சிதான் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இரண்டு உள்ளாட்சி அமைப்புகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகிறார்களே தவிர, யாருக்கும் இறைச்சிக் கழிவுகளை அகற்றும் எண்ணம் இல்லை என தெரிகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு இந்த பகுதியை தூய்மைப் படுத்தி, யார் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட வேண்டும் என்ற முடிவையும் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x