Last Updated : 09 Dec, 2023 09:38 PM

 

Published : 09 Dec 2023 09:38 PM
Last Updated : 09 Dec 2023 09:38 PM

கோவை | தொடர்மழையால் சுவர் இடிந்து டேங்கர் லாரிகள் மீது விழுந்ததால் எரிவாயு கசிவு

கோவை: தொடர் மழையால் கோவை அருகே கருங்கல் சுவர் இடிந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த 5 டேங்கர் லாரிகளின் மீது விழுந்தது. இதில் அந்த லாரிகளில் இருந்து எரிவாயு கசிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, திருமலையாம்பாளையம் பிரிவு உள்ளது. சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த இடத்தில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் சுப்பிரமணி என்பவர், டேங்கர் லாரிகள் நிறுத்துமிடம் நடத்தி வருகிறார். அவ்வழியாக செல்லும் டேங்கர் லாரிகள் இங்கு நிறுத்தப்படும். இந்த டேங்கர் லாரி நிறுத்துமிடம் அருகே பிரபு என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புப் பொருட்களை போட்டு வைக்கும் குடோன் உள்ளது.

இந்த குடோன் 20 அடி உயரம் 50 மீட்டர் தூரம் கொண்ட கருங்கல் கற்களால் ஆன காம்பவுண்ட் சுவர் கொண்டதாகும். இந்நிலையில், கோவையின் பல்வேறு இடங்களில் நேற்று (டிச.8) இரவு முதல் இன்று (டிச.9) அதிகாலை வரை கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக, இந்த இரும்பு குடோனின் கருங்கல் காம்பவுண்ட் சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.

இடிந்த இந்த சுவர் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான 5 டேங்கர் லாரிகளின் மீது விழுந்தது. கல்சுவர் இடிந்து விழுந்ததில் டேங்கர் லாரிகளின் வால்வுகள் உடைந்தன. இதில் 3 லாரிகளில் பெரிய சேதமும், 2 லாரிகளில் லேசான சேதமும் ஏற்பட்டது. வால்வு சேதமடைந்ததைத் தொடர்ந்து அதிலிருந்து எரிவாயு கசிந்தது.

இதுகுறித்து மதுக்கரை போலீஸாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர், இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான மதுக்கரை போலீஸார் மற்றும் பாரத் பெட்ரோலியம் கோவை தலைமை நிர்வாக அதிகாரி சிவக்குமார் உள்ளிட்டோர் அங்கு வந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து லாரிகளில் ஏற்பட்ட சேதம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. பின்னர், அதன் மீது தீ பிடிக்காதவாறு பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன.

பின்னர், அந்த 5 லாரிகளும் கேரளா மாநிலம் கஞ்சிக்கோட்டில் உள்ள அதன் தலைமை அலுவலகத்துக்கு மதியம் அனுப்பி வைக்கப்பட்டது. மதுக்கரை போலீஸார் கூறும்போது, “5 லாரிகளும் கஞ்சிக்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு வைத்து எரிவாயு வேறு லாரிக்கு மாற்றப்பட உள்ளது. ஒவ்வொரு டேங்கர் லாரியும் 16 முதல் 18 டன் எரிவாயு கொள்ளளவுடன் இருந்தது. இந்த சேதத்தால் ஒவ்வொரு லாரியில் இருந்தும் 3 டன் அளவுக்கு எரிவாயு வெளியேறியது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x