கோவையில் பரவலாக கொட்டித் தீர்த்த கனமழை - 100+ வீடுகளில் மழைநீர்; போக்குவரத்து பாதிப்பு

கோவையில் பரவலாக கொட்டித் தீர்த்த கனமழை - 100+ வீடுகளில் மழைநீர்; போக்குவரத்து பாதிப்பு
Updated on
2 min read

கோவை: கோவையின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. சாலையோர தாழ்வான இடங்களில், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவையின் பல்வேறு இடங்களில் நேற்று (டிச.08) இரவு முதல் இன்று (டிச.09) காலை வரை கனமழை பெய்தது. கனமழையால் மாநகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அவிநாசி சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதி, கிருஷ்ணசாமி சாலையில் உள்ள சோமசுந்தரா மில் வழித்தடம், கிக்கானி பள்ளி வழித்தடம், லங்கா கார்னர் ரயில்வே பாலம் கீழ் பகுதி ஆகிய சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.

அதேபோல், அவிநாசி சாலை, கணபதி, பீளமேடு, ஒண்டிப்புதூர், காந்திபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள குழிகளாக காணப்பட்ட சாலைகளிலும், தாழ்வான சாலையோரங்களிலும் மழைநீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் மழைநீர் தேங்கிய சுரங்கப்பாதை பகுதிகளில் நேரடி கள ஆய்வு நடத்தி, தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணியை துரிதப்படுத்தினர்.

மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத மோட்டார்களை வைத்து, சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றினர். அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் 5 மணி நேரத்துக்கு பின்னர் உறிஞ்சி அகற்றப்பட்டது. மழைநீர் உறிஞ்சி அகற்றப்பட்ட சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த சேறு, சகதி கழிவுகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து அகற்றினர்.

ஆவாரம்பாளையத்தில் உள்ள பட்டாளம்மன் கோயி்ல் வீதியில் தாழ்வான பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளிலும், திருச்சி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள ஆர்.வி.எல் காலனியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்து யாரும் உடனடியாக வராததால் மக்கள் தங்களது வீடுகளில் தேங்கிய மழைநீரை அகற்றினர். கனமழையின் காரணமாக நஞ்சுண்டாபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

உடையம்பாளையம் கக்கன் நகரில் 3 பேர் சென்று கொண்டிருந்த கார் வெள்ள நீரில் சிக்கியது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை மீட்டனர். மேலும், உப்பிலிபாளையத்தில் உள்ள ரயில்வே பணிமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in