

பொள்ளாச்சி: ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி குடியரசு தலைவருக்கு அனுப்ப பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் கையெழுத்து பெற திமுக சார்பில் அச்சடித்து வழங்கப்பட்ட கடிதங்கள் பொள்ளாச்சி அருகே சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்தன. ‘நீட் விலக்கு நமது இலக்கு’ என்ற பெயரில், நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துகளை 50 நாட்களில் பெறுவதற்கான இயக்கம் மாவட்டம் தோறும் திமுகவின் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடத்தப்பட்டு பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோரிடம் கையெழுத்து பெறப்படுகிறது. குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கான இந்த கடிதத்தில், ‘ஏழை, எளிய, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும், நீட் தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில், பெயர், மொபைல் எண் ஆகியவற்றை எழுதி கையெழுத்திடும் வகையில் உள்ளது. குடியரசு தலைவரின் முகவரி அச்சடிக்கப்பட்ட இந்த கடிதத்தை பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் கொடுத்து கையெழுத்து பெற திமுகவினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே சோளபாளையம் கிராமத்துக்கு செல்லும் வழியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இந்த கடிதங்கள் குப்பையில் வீசப்பட்டு கிடந்தன. இது அப்பகுதி திமுகவினர் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.