

சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலமாக தமிழகம் இருந்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் குறித்து இந்தாண்டு அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒவ் வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறது. அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி 2-வது வாரத்தில் தொடங்கி 7 நாட்களுக்கு சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் பள்ளி, கல்வி நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், போக்குவரத்து துறை, போலீஸார் சார்பில் பேரணி, கருத்தரங்குகள், விழிப்புணர்வு நாடகங்கள், பிரசுரங்கள் விநியோகம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டில் சாலைப் பாதுகாப்பு வாரம் எப்போது கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த 71,431 சாலை விபத்துகளில் மட்டும் மொத்தம் 17,218 பேர் உயிரிழந்தனர். இது முந்தைய ஆண்டு பலி எண்ணிக்கையைவிட 1,576 அதிகமாகும். இவ்வாறு ஆண்டுதோறும் தமிழகத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகமாகி வரும் நிலையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு உயர் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்காதது ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சாலைப் பாதுகாப்பு வாரத்தை எந்த தேதியில் கடைப்பிடிப்பது என்பது குறித்து இதுவரை எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. அவ்வாறு உத்தரவு வந்த பிறகு சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படும்” என்றார்.