

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட தென்சென்னையின் முக்கியமான பகுதிகளான பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரியில் வெள்ளநீர்சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர். வேளச்சேரி ராம்நகர் 6-வது தெரு, விஜயநகர் 11,12,13- வது தெருக்களில் இடுப்பளவு வெள்ளநீர் தேங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகு மூலமும்,தன்னார்வலர்கள் தண்ணீரில் நீந்தியும் தேவையான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், மீட்பு பணியின்போது வேளச்சேரி எம்எல்ஏ-வை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, எம்எல்ஏவை நோக்கி ஒருவர், ஒருமையில் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, மக்களுக்கும், எம்எல்ஏவின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து எம்எல்ஏகாரில் ஏறவிடாமல் அப்பகுதி மக்கள் தடுத்தனர். அந்த பகுதியில்அதிமுக நிர்வாகிகளும் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் ஏற்பாட்டில்தான் பொதுமக்கள் முற்றுகை நடந்ததாக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் கூறியபோது, ``நான் ஒரு ஐடி ஊழியர், எந்த கட்சியும் சார்ந்தவர் அல்ல'' என ஒரு பெண்கூறினார். அவர்களை எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ஒருமையில் பேச முயற்சித்த நிலையில், மேலும் அவர்கள் ஆவேசமடைந்தனர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சர்ச்சை பேட்டி: மீட்பு பணி தொடங்கிய நாளில், யுடியூபர் ஒருவரின் கேள்விக்கு வேளச்சேரி எம்எல்ஏ அளித்த பதிலும் சர்ச்சையாகியுள்ளது. அந்தபேட்டியில், ‘‘இயற்கை பேரிடர்நடக்கும்போது இதெல்லாம் சர்வசாதாரணமான விஷயம். இதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேளச்சேரி ஏரியின் உயரம் அதிகரிக்கும்போது ஊருக்குள் தண்ணீர் வரத்தான் செய்யும். அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நிவாரண பணிகளை பொறுத்தவரை அதிகபட்சமாக இதுதான் பண்ண முடியும். தண்ணீர் கடலுக்கு செல்ல வேண்டும். கடல் உள்வாங்கலைனா நாம என்ன பண்ண முடியும். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது’’ என எம்எல்ஏ தெரிவித்தார். அவரது அலட்சிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.