Published : 13 Jan 2018 09:54 AM
Last Updated : 13 Jan 2018 09:54 AM

அனைத்து பொருட்களும் ஓரிடத்தில் கிடைப்பதால் கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் குவியும் மக்கள்

கோயம்பேடு பொங்கல் சிறப்புச் சந்தையில், பொங்கல் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஓரிடத்தில் கிடைப்பதால் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

கோயம்பேடு மலர் சந்தை வளாகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் பொங்கல் சிறப்புச் சந்தை செயல்பட்டு வருகிறது. பஸ்கள் சரியாக இயக்கப்படாத நிலையில் முதல் சில நாட்களுக்கு விற்பனை மந்தமாக இருந்தது. இந்நிலையில் நேற்று பஸ்கள் சீராக இயக்கப்பட்டதால், சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் சிறப்பு சந்தையில் குவிந்தனர். இதனால் கோயம்பேடு சந்தை பரபரப்பாக காணப்பட்டது.

16-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த சிறப்புச் சந்தையில் மொத்த விலையில் 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.300-க்கும், சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.30-க்கும் விற்கப்படுகிறது. மஞ்சள் செடிகள் மொத்த விலையில் 10 செடிகள் கொண்ட கொத்து ரூ.100-க்கும், சில்லறை விலையில் 2 செடிகள் கொண்ட கொத்து ரூ.20 முதல் ரூ.50 வரையும் விற்கப்படுகிறது.

சாமந்திப் பூ 1 முழம் ரூ.10, கதம்ப பூ, கனகாம்பரம், மல்லி ஆகியவை ஒரு முழம் தலா ரூ.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு பூசணிக்காய் (சுமார் 5 கிலோ) ரூ.70, ஒரு தேங்காய் ரூ.35, மாவிலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு சீப்பு ரூ.30 முதல் ரூ.60 வரை, ஒரு தார் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10, ஒரு வாழை இலை ரூ.5-க்கு விற்கப்படுகிறது. சிறுவர்களுக்கான போகி மேளம் ரூ.30-க்கு விற்கப்படு கிறது.

காய்கறிகளைப் பொருத்தவரை, மொச்சைக்காய் மற்றும் துவரைக்காய் ஆகியவை கிலோ ரூ.50, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, அவரைக்காய் கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. பழங்களை பொருத்தவரை ஆப்பிள் கிலோ ரூ.120, மாதுளை ரூ.100, ஆரஞ்சு ரூ.70. சாத்துக்குடி ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

கரும்பு விற்பனை பாதிப்பு

கடந்த 40 ஆண்டுகளாக பொங்கலின்போது கரும்பு விற்பனை செய்ய சென்னைக்கு வரும் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை சேர்ந்த அ.ஜெகந்நாதன் கூறும்போது, “இந்த சிறப்பு சந்தைக்கு, மதுரை, சிதம்பரம், சேத்தியாதோப்பு போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 200 லாரிகளுக்கு மேல் கரும்பு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒரு கட்டு கரும்பு ரூ.400-க்கு விற்கப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் சந்தைக்கு மக்கள் வராதது, அரசு முன்கூட்டியே விடுமுறை அறிவித்த நிலையில், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் குறுகிய காலத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்துக்கு தயாராக முடியாதது போன்ற காரணங்களால் கரும்பு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு ஒரு கட்டு ரூ.300-க்கு விற்க வேண்டியுள்ளது” என்றார்.

சிறப்பு சந்தைக்கு வந்திருந்த சென்னை முகப்பேரைச் சேர்ந்த எம்.சந்திரன்- பிரேமா தம்பதியர் கூறும்போது, “இந்த ஆண்டு கரும்பு, மொச்சைக்காய் விலை குறைந்துள்ளன. தேங்காய் விலை அதிகரித்துள்ளது. இந்த சந்தைக்கு வந்தால் எல்லா பொருட்களையும் ஒரே இடத்தில் மலிவாக வாங்கிக்கொள்ளலாம். அதற்காகவே இந்த சந்தைக்கு வந்திருக்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x