பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் உரிமையாளர், மனைவி முன்ஜாமீன் மனு தள்ளுபடி 

பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் உரிமையாளர், மனைவி முன்ஜாமீன் மனு தள்ளுபடி 
Updated on
1 min read

மதுரை: பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் அதன் உரிமையாளர், அவரது மனைவி ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வறு நகரங்களில் செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி நகை சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி மக்களிடம் மாதத் தவணைகளில் ரூ.100 கோடி அளவில் பணம் வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவர் மனைவி கார்த்திகாமதன் ஆகியோர் மீது மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மதன் செல்வராஜ், கார்த்திகா மதன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், கரோனா கால நெருக்கடியால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு நகை மற்றும் பணத்தை திரும்ப வழங்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காண விரும்புகிறோம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதன் செல்வராஜ், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்திகா இன்னும் தலைமறைவாக உள்ளார். ரூ.100 கோடிக்கு அதிகமாக மோசடி நடைபெற்றுள்ளது. இதுவரை 1900-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்'' என்றார். இதையடுத்து முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in