Published : 02 Jan 2018 08:44 AM
Last Updated : 02 Jan 2018 08:44 AM

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்துகளில் சிக்கி 3 பேர் பலி; 300 இளைஞர்கள் காயம்

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்துகளில் சிக்கியவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். 300 இளைஞர்கள் காயமடைந்தனர்.

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, அண்ணாசாலை, கோயம்பேடு, கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இளைஞர்கள் பைக்குகளை அதிவேகமாக ஓட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 15 பேர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும், 84 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், 27 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், 155 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றனர். 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு சென்றனர்.

சென்னை அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்ற சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பவுல் (26). பட்டாபிராமில் உள்ள தேவாலயத்துக்கு உறவினர்களுடன் ஒரே பைக்கில் சென்றார். பிராத்தனையை முடித்து நள்ளிரவு 12.40 மணிக்கு 3 பேரும் ஒரே பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆவடி பேருந்து நிலையம் அருகே சென்றபோது பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த பவுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பு அருகே ரெய்மன் (27) என்பவரும், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் (25) என்பவர் காசிமேடு சூரியநாராயணா தெருவிலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

சென்னையில் 2014-ம் ஆண்டு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 119 பேர் காயமடைந்தனர். 5 பேர் உயிரிழந்தனர். 2015-ம் ஆண்டு 58 பேர் காயமடைந்தனர். 5 பேர் உயிரிழந்தனர். 2016-ம் ஆண்டு 296 பேர் காயமடைந்தனர். 4 பேர் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டு 120 பேர் காயமடைந்தனர் 5 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x