வேளச்சேரி | பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு

வேளச்சேரி | பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்பு
Updated on
1 min read

சென்னை: கடந்த திங்கள்கிழமை அன்று மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை - வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலைக்கு அருகே அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகில் கட்டுமான பகுதிக்காக வெட்டப்பட்ட சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் மீட்கப்பட்டது.

மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 6 பேர் இந்த பள்ளத்தில் சிக்கினர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சிலரை பத்திரமாக மீட்டனர். இருந்தும் அந்த பள்ளத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் நரேஷ் மற்றும் கட்டுமான பொறியாளர் ஜெயசீலன் ஆகிய இருவர் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பள்ளத்தில் இருந்த நீரை வெளியேற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் என்.எல்.சி, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்களும் பங்கு கொண்டன. இந்த பள்ளத்தில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று அதிகாலை பள்ளத்தில் சிக்கி இருந்த இரண்டு தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் நரேஷ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு தொழிலாளியின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மற்றொரு தொழிலாளரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் சிக்கிய ஜெயசீலனின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். பள்ளத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in