

திருவாரூர்: லஞ்சம் வாங்கியதாக மன்னார்குடி நகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்றும் கூத்தாநல்லூர் மின் வாரிய கேங்மேன் ஆகியோரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி மஸ்தான் பள்ளித் தெருவில், பொதக்குடியைச் சேர்ந்த சர்புதீன் (60) என்பவர்வணிக வளாகம் கட்டியுள்ளார். இதற்கு மின் இணைப்பு பெற கட்டுமானப் பணி நிறைவடைந்ததற்கான தடையில்லா சான்று கோரி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு நகராட்சி வருவாய் ஆய்வாளர் தனபால்(55), சர்புதீனிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் சர்புதீன் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சித்ரா, அனிதா, அருண், பிரசாத், சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் ஆலோசனையின்படி, நேற்று சர்புதீன் ரூ.6,000 ரொக்கத்தை தனபாலிடம் வழங்கினார். இந்தப் பணத்தை தனபால் வாங்கியதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர்.
கேங்மேன் கைது: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள அத்திக்கடையைச் சேர்ந்த அமீர் அலிவீட்டுக்கு மின் இணைப்பு வழங்க,கூத்தாநல்லூர் மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றும் ஆனந்த் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அமீர் அலியிடம் லஞ்ச பணத்தை ஆனந்த் வாங்கியபோது, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். பின்னர், இருவரையும், திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் லஞ்சம் வாங்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அரசு ஊழியர்கள் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.