

சென்னை: மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலைமுன்னிட்டு, அனைத்துக் கட்சிகளும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.
பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொறுப்பாளர்களை நியமித்தார். இந்நிலையில், மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் அண்ணாமலை நேற்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மற்றும்அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தொகுதிகளில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது, எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
மேலும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தவும், வரும் 20-ம்தேதி முதல் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை தொடங்கி, தீவிரப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியதாக கட்சியினர் தெரிவித்தனர்.