

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில், 4 துணைத் தலைவர்கள், 40 உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக ஏ.ஜெ.சேகர் ரெட்டி 3-வது முறையாக நியமிக்கப்பட்டார். மேலும், இந்த குழுவில் 4 துணைத் தலைவர்கள், 40 உறுப்பினர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி கடந்த மாதம் நியமித்தார்.
அதற்கான உத்தரவு நகலை திருமலை கோயில் செயல் அலுவலர் தர்மா ரெட்டி வெளியிட்டார். அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு துணைத் தலைவர்களாக ஆனந்தகுமார், வெங்கடசுப்பிரமணியம், சுதந்திரம், ஸ்ரீ சரண் ஆகியோர் உட்பட 40 உறுப்பினர்கள் நேற்று தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் பதவி ஏற்றனர். அதற்கான சான்றிதழ்களை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆலோசனைக் குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி,உறுப்பினர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.