Published : 16 Jan 2018 05:10 PM
Last Updated : 16 Jan 2018 05:10 PM

ரூ.100-ஐ நோக்கி பெட்ரோல், டீசல் விலை; விலைக் கட்டுப்பாடு தேவை: ராமதாஸ்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின் கீழ் கொண்டு வருவதுடன், அவற்றிற்கு விலைக் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியா முழுவதும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் சத்தமின்றி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகளை அதிகரித்து, விவசாயம் மற்றும் போக்குவரத்துத் துறையினரின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 09 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.73.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.65.23 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைக்கும் முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம்தான் பெட்ரோல், டீசல் விலைகள் மக்களுக்கே தெரியாமல் தினமும் உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.65.46 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.89 ஆகும். அதாவது கடந்த ஆறு மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8.45 உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.56.13 என்ற அளவிலிருந்து ரூ.65.23 ஆக அதாவது ரூ.9.10 உயர்ந்துள்ளது. இதை சாதாரண மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை அறவே இல்லை என்பது ஒருபுறமிருக்க, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கும் தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. உதாரணமாக, பெட்ரோல் விலை நிர்ணயம் தொடர்பான புள்ளி விவரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் அடக்கவிலை 76.26 அமெரிக்க டாலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசல் நிர்ணயம் தொடர்பான புள்ளி விவரத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 81.57 டாலர் என குறிப்பிடப் பட்டுள்ளது. ஒரே மாதிரியான கச்சா எண்ணெய்க்கு இரு விலைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.

அதுமட்டுமின்றி, டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டு வருவதும், இரு எரிபொருட்களுக்கும் இடையிலான வித்தியாசம் குறைந்து வருவதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எரிபொருட்களின் விலை தினமும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.45 உயர்த்தப்பட்ட நிலையில், டீசல் விலை ரூ.9.10 உயர்த்தப்பட்டுள்ளது. இரு எரிபொருட்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.11.10 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.08.66 ஆக குறைந்து விட்டது. டீசல் விலையை அதிகமாக உயர்த்துவதை நியாயப்படுத்த முடியாது.

பெட்ரோல் என்பது தனிநபர் போக்குவரத்துக்கான எரிபொருள் ஆகும். ஆனால், டீசல் என்பது பொதுப்போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, விவசாயம், மீன்பிடித் தொழில், தொழிற்சாலை பயன்பாடு என நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பயன்படக்கூடிய ஒன்றாகும். அவ்வாறு இருக்கும் போது பெட்ரோல் விலையை விட டீசல் விலையை அதிகமாக உயர்த்துவதை ஏற்க முடியாது.

பன்னாட்டு சந்தையில் உயர்தரமான ப்ரெண்ட் வகை கச்சா எண்னெயின் இன்றைய விலை பீப்பாய் 70 டாலர் மட்டுமே. ஆனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.89க்கும், டீசல் 65.23க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் தான் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது. அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.73.00 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், இப்போது கச்சா எண்ணையின் விலை, அப்போதைய விலையில் பாதிக்கும் குறைவாக உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு வரி விகிதம் கடுமையாக உயர்த்தப்பட்டதே காரணம்.

இதேநிலை நீடித்தால் அடுத்த சில வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100 என்ற அளவைத் தாண்டி விடும். அவ்வாறு உயர்ந்தால் மக்கள் மட்டுமின்றி, அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும்; விலைவாசி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து விடும். பெட்ரோல், டீசலின் அடக்கவிலை ரூ.30க்கும் குறைவாக உள்ள நிலையில் அதை விட இரு மடங்குக்கும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதை ஏற்க முடியாது. எனவே, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின் கீழ் கொண்டு வருவதுடன், அவற்றிற்கு விலைக் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x