Published : 08 Dec 2023 06:20 AM
Last Updated : 08 Dec 2023 06:20 AM

ஒரே நேரத்தில் அனைத்து சாலைகளிலும் தோண்டப்படும் பள்ளம் - மதுரையில் தீவாக மாறுகிறதா கே.கே.நகர்?

மதுரை கே.கே.நகர் 80 அடி சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள். . படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை லேக்வியூ சாலையில் பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப்பணிகளை முடிக்காத நிலையில், கே.கே.நகரில் ஒரே நேரத்தில் அனைத்துச் சாலைகளிலும் பள்ளங்களைத் தோண்டுவதால் போக்குவரத்து அடியோடு பாதிப்பதோடு இப்பகுதி மக்கள் தனி தீவில் வசிப்பதுபோல் பாதி்ப்புக்குள்ளாகி உள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் பாதாளசாக்கடைப்பணிகள், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழைக்காக இப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது மழை நின்றதால் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனத் தொழிலாளர்கள் ஓர் இடத்தில் தோண்டிய பள்ளத்தில் பாதாளசாக்கடை, குடிநீர் திட்டப்பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு முடிக்காமல் பாதிப்பணியை நிறுத்திவிட்டு அடுத்தடுத்த குடியிருப்புகளுக்குச் சென்றுவிடுகின்றனர்.

இதனால், புதிய சாலைகள் போடுவதற்கு நிதி ஒதுக்கியும், அந்த நிதியைக் கொண்டு உடனுக்குடன் மாநகராட்சியால் புதிய சாலைகள் அமைக்க முடியவில்லை. பெரும்பாலான வார்டுகளில் ஒப்பந்த நிறுவனங்கள் பள்ளங்கள் தோண்டிய இடங்களில் அதைச் சரியாக மூடாமல் மேடு, பள்ளமுமாகவும் விட்டு செல்கின்றனர். மழை பெய்யும்போது பள்ளம் தோண்டிய இடம் கீழே இறங்கவே, அதில் வாகனங்கள் புதைந்துவிடுகின்றன. மதுரை கே.கே.நகர் லேக்வியூ சாலையில் பாதாள சாக்கடைப் பணிக்காகவும், குடிநீர்த் திட்டப் பணிக்காகவும் தோண்டிய பள்ளங்களை தற்போது வரை சரியாக மூடவில்லை. அதனால், இரு வழிச்சாலையாக செயல்பட்ட இந்தச் சாலை கடந்த 6 மாதங்களாக ஒரு வழிச்சாலையானது.

இந்த சாலையில் நேற்று முன்தினமும், நேற்றும் கனரக வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளங்களில் புதைந்து சிக்கிக் கொண்டன. பிறகு, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அந்த வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. லேக்வியூ சாலையில் பணிகள் முடிக்கப்படாத நிலையில் தற்போது கே.கே.நகரில் ஒரே நேரத்தில் அனைத்துச் சாலைகளையும் ஒப்பந்த நிறுவனத் தொழிலாளர்கள் குடிநீர் பணிகளுக்காகத் தோண்டத் தொடங்கியுள்ளனர்.

கே.கே.நகரில் ஏராளமான மருத்துவமனைகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று சாலைகளைத் தோண்டிவிட்டு சரியாக மூடாமல் போட்டுச் செல்கின்றனர். இதனால், இந்தச் சாலைகளில் பள்ளம் தோண்டிய பகுதிகளைப் பயன்படுத்த முடியாமல் சாலைகள் சுருங்கிவிட்டதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும், பள்ளம் தோண்டும்போது திடீரென்று ‘டேக் டைவர்சன்’ என வாகனங்களைத் தொழிலாளர்கள் முன்னறிவிப்பு இன்றி திருப்பிவிடுகின்றனர். கே.கே.நகர் நகர் முழுவதுமே இதுபோல் பல இடங்களில் சாலைகளை தோண்டிப்போட்டு வாகனங்களைத் திருப்பிவிடுவதால் கே.கே. நகர் பகுதியில் வாகன ஓட்டுநர்கள் எந்த நேரத்தில் எந்த வழியாகச் செல்வது, வருவது எனத் தெரியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். வார விடுமுறை நாட்களில் மாட்டுத்தாவணி சாலையில் செயல்படும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ் ‘ரிங்’ ரோடு செல்ல வேண்டிய வாகனங்கள், மேலமடை சிக்கனல் வழியாக சிவகங்கை சாலைக்குத் திருப்பி விடப்படுகின்றன.

அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வழியாக சிவகங்கை செல்லும் சாலை சமீப காலமாக கே.கே.நகர்-அண்ணாநகர் சந்திப்பு சிக்னல் வரை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் இந்தச் சாலையில் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. அதனால், மேலமடை சிக்கனல், லேக்வியூ சாலையில் நிரந்தரமாகவே போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. லேக்வியூ சாலைப் பணியை முடிக்காமலே கே.கே.நகரில் திரும்பிய பக்கமெல்லும் சாலைகளில் பள்ளங்களை தோண்டுவதால் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் சாலைகளில் தடையின்றிச் செல்ல முடியவில்லை.

போக்குவரத்து மிகுந்த நேரத்தில் கே.கே.நகர், அண்ணா நகர், லேக்வியூ சாலைகள் மட்டுமில்லாது மேலமடை சிக்கனல் வழியாக ‘ரிங்’ ரோடு செல்லும் சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். லேக்வியூ சாலை வழியாக மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், பூ மார்க்கெட் மற்றும் நெல் வணிக வளாகம் செல்லும் வாகனங்களால் கே.கே.நகர் பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் நகரின் பிற பகுதிகளுக்கு உடனுக்குடன் செல்ல முடியாமல் தனித் தீவில் வசிப்பதுபோல் பாதிக்கப்படுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x