Published : 27 Jan 2018 08:49 AM
Last Updated : 27 Jan 2018 08:49 AM

5 காவலர்கள் உட்பட 8 சாதனையாளர்களுக்கு விருது: குடியரசு தின விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னையில் நேற்று நடைபெற்ற நாட்டின் 69-வது குடியரசு தின விழாவில் 5 காவலர்கள் உட்பட 8 பேருக்கு பதக்கங்கள், விருதுகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.

எழும்பூர் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கி.சண்முகத்துக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட பயணியை தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியதை பாராட்டும் வகையில் அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு மத நல்லிணக்க கூட்டங்களை நடத்தி மதப் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்க்க காவல் துறைக்கு உதவியதுடன், மதக் கலவரங்களை உருவாவதைத் தடுக்கவும் பணியாற்றியுள்ளார். இதனைப் பாராட்டும் வகையில் ரூ. 25 ஆயிரத்துக்கான கேட்புக் காசோலையுடன் கூடிய கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்தை முதல்வர் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து ஹெக்டேருக்கு 18 ஆயிரத்து 184 கிலோ நெல் மகசூல் எடுத்துள்ளார். இதனைப் பாராட்டும் வகையில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையுடன் கூடிய விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருதை முதல்வர் வழங்கினார்.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகப் பணிபுரிந்த தஞ்சை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.கண்ணன், சேலம் மண்டல மத்திய புலனாய்வுப் பிரிவு சார்பு ஆய்வாளர் க.ராமகிருஷ்ணன், வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலைய தலைமைக் காவலர் கோ.நாராயணன், விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர் இ.ஜோசப், சென்னை பழவந்தாங்கல் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் கோ.நாராயணன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இந்தப் பதக்கத்துடன் ரூ. 40 ஆயிரத்துக்கான காசோலையையும் முதல்வர் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x