Published : 07 Dec 2023 01:45 PM
Last Updated : 07 Dec 2023 01:45 PM

“தமிழக அரசு கோரியுள்ள நிவாரண நிதி குறித்து மத்திய அரசுக்கு ராஜ்நாத் சிங் எடுத்துரைப்பார்” - அண்ணாமலை

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் | கோப்புப்படம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சற்று நேரத்துக்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருடன், ஹெலிகாப்டர் மூலமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.

பாஜக சார்பில் அனைத்து தலைவர்களும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, தமிழக மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருவதற்கு நன்றி தெரிவித்திருக்கிறோம். அதேபோல் வரும் காலத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம், தமிழக மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு விரைந்து செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளோம்.

நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைக்கால நிவாரண நிதியாக, ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். முதல்வர் கடிதம் எழுதிய 24 மணி நேரத்துக்குள், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இணை அமைச்சர் எல்.முருகனுடன் தமிழகத்துக்கு அனுப்பியிருக்கிறார். தமிழக மக்கள் நலனில் பிரதமர் எந்தளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.

2015-ம் ஆண்டில் இருந்தே, அம்ரித் திட்டத்தின் கீழ் சென்னைக்கு மட்டுமே 4397 கோடி ரூபாய், குறிப்பாக வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கொடுத்துள்ளது. டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதியில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. மத்திய அரசு மிக வேகமாக இருப்பதற்கு இதுவொரு சான்று. நிச்சயமாக அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஆய்வுக்குப் பின்னர், தமிழக அரசு கோரியுள்ள நிவாரணம் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைப்பார்" என்று அவர் கூறினார்.

ஹெலிகாப்டரில் ஆய்வு: வியாழக்கிழமை காலை தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றனர். ஆய்வுக்குப் பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து மழை வெள்ள பாதிப்பு குறித்த விவரங்களை கேட்கவிருக்கிறார். முன்னதாக விமான நிலையம் வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x