

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டார். வேளச்சேரி 4-வது மெயின் ரோடு, சைதாப்பேட்டை மேற்குஜோன்ஸ் சாலை, ஆயிரம்விளக்கு தாமஸ் சாலை, தி.நகர், எழும்பூர் மின்சார வாரிய அலுவலகம் சந்திப்பு, ஆர்.வி.நகர், ராயபுரம் ஆர்.கே.நகர், வடசென்னை மேற்கு, சின்ன மாத்தூர், கீழ்ப்பாக்கம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பார்வையிட்டார்.
அப்போது, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அண்ணாமலை, அவர்களுக்கு பாய், போர்வை, அரிசி, காய்கறி, குடிநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், விளையாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.