Published : 07 Dec 2023 06:18 AM
Last Updated : 07 Dec 2023 06:18 AM

சென்னை குடிநீர் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைப்பு

செம்பரம்பாக்கம் மற்றும் பல்வேறு ஏரிகளிலிருந்து வெளியேறும் நீரால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அனகாபுத்தூர் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. படம்: எம்.முத்துகணேஷ்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந்துள்ளது. இதன் காரணமாக, நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளது. ஆகவே, இந்த ஏரிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதில், நேற்று முன் தினம் காலை நிலவரப்படி, புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 5,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட அந்த ஏரியின் நீர் இருப்பு, 2,976 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 19.81 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,240 கன அடியாகவும் இருந்தது. ஆகவே, நேற்று காலை 9.30 மணியளவில் புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டது.

பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 17,580 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 அடி உயரம் கொண்ட அந்த ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை 2,999 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 34.55 அடியாகவும், நீர் வரத்து 8,585 கன அடியாகவும் இருந்தது. ஆகவே, நேற்று மதியம் 2 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,095 கன அடியாக குறைக்கப்பட்டது. சோழவரம் ஏரியிலிருந்து விநாடிக்கு 2,550 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரி முழுமையாக நிரம்பி இருந்தது. நீர் வரத்து விநாடிக்கு 2,662 கன அடியாக இருந்தது. ஆகவே, சோழவரம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,550 கன அடியாக குறைக்கப்பட்டது.

கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து விநாடிக்கு 590 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இச்சூழலில் நேற்று காலை 500 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரி முழுமையாக நிரம்பி இருந்தது. நீர் வரத்து விநாடிக்கு 450 கன அடியாக இருந்தது. எனவே, அந்த ஏரியிலிருந்து விநாடிக்கு 440 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை (24 அடி) எட்டும் நிலையில் உள்ளது. செம்பரம்பாக்கம் மற்றும் பல்வேறு ஏரிகளிலிருந்து வெளியேறும் நீரால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அனகாபுத்தூர் தரைப்பாலம் மூழ்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x