Published : 07 Dec 2023 04:04 AM
Last Updated : 07 Dec 2023 04:04 AM
மதுரை: இரவு பணியில் இருந்த மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அரசு மருத்துவ மனையில் நேற்று முன்தினம் இரவு அண்ணா பேருந்து நிலைய தலைக்காய அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவரை அடையாளம் தெரியாத இரு நபர்கள் தாக்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். ஆனால், இதுபோல் மருத்துவர்கள் மீது அடிக்கடி நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்துவதால் இரவு பணிக்கு வரும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அவர்களது அச்சத்தை போக்கி பாதுகாப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினரை வலியுறுத்தியும் நேற்றைய போராட்டத்தின் போது மருத்துவர்கள் கோஷமிட்டனர். மேலும், அவசரமில்லாத சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட் டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோரை உடனடியாக கைது செய்தாலும், மாதந்தோறும் ஏதாவது ஓர் இடத்தில் இது போன்ற சம்பவத்தால் மருத்துவர்கள் பாதிக்கப் படுகிறார்கள். மருத்துவர்கள் முடிந்தளவு நோயாளிகளின் உயிரைக் காக்க சிகிச்சை அளிக்கிறார்கள்.
ஆனால், சில சமயம் துரதிருஷ்டவசமாக மரணம் நடக்கிறது. அந்த நேரத்தில் சூழ்நிலையை புரிந்து கொள்ளாத உறவினர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க சட்டம் உள்ளது. அப்படியிருந்தும் இது போன்று தாக்குதல் நடப்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT