இலக்கு கஜானாவாக இருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்: கமலுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

இலக்கு கஜானாவாக இருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்: கமலுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி
Updated on
1 min read

நம் இலக்கு கஜானாவை நோக்கி அல்ல; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி இருக்க வேண்டும் என்று ரசிகர்களுடனான சந்திப்பில் நேற்று நடிகர் கமல்ஹாசன் கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர், "கமல்ஹாசன் கஜானாவை நோக்கிச்சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக மாவட்ட வாரியாக ரசிகர்களை அவர் சந்தித்து வருகிறார். ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ரசிகர்களை நேற்று முன்தினம் சந்தித்தார்.

2-வது நாளான நேற்று நாமக்கல், தேனி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளையும், ரசிகர்களையும் சந்தித்தார். அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அப்போது கமல்ஹாசன், "இதுபோல் நாம் கூடுவது முதல்முறை அல்ல. இன்று நம் இலக்கு சற்றே மாறியிருக்கிறது. கடந்த 37 ஆண்டுகளாக என்னுடன் வரும் சகோதரர்கள் பலர் இங்கே வந்துள்ளனர். என்ன கிடைக்கும் என்று இதுவரையும் நீங்கள் கேட்டதில்லை.

அதேபோல, இனியும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இலக்கு நோக்கி பயணிக்க தயாராக இருக்க வேண்டும்.

நம் இலக்கு கஜானாவை நோக்கி அல்ல; மக்களின் முன்னேற்றம் நோக்கியதாக இருக்க வேண்டும். அதனால்தான் நமக்கு வெற்றி நிச்சயம் என்று உறுதியாக நம்புகிறேன்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "#கமல்ஹாசன் #Kamalhassan கஜானாவை நோக்கிச்சென்றாலும் ஏமாற்றமே மிஞ்சும். அது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு விட்டது" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in