

வேலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 2 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 4 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 2 வாகனங்களில் உணவு மற்றும் அத்தியாவசியமான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று வழியனுப்பி வைத்தார்.
முதற்கட்ட நிவாரண உதவிகளாக மாவட்டத்தில் இருந்து தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் மூலம் பிரெட் பாக்கெட்டுகள்-2,020, பன் வகைகள்-3,200, குடிநீர் பாட்டில்கள்-5,400, பிஸ்கெட் பாக்கெட்டுகள்-10,853, அரிசி மூட்டைகள்-5 மற்றும் போர்வைகள்-1,950, துண்டுகள்-780, வாளி மற்றும் குவளைகள்-1,500, குளியல் சோப்புகள்-100, பற்பசைகள்-100, பல்துலக்கிகள்-100, பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள்-650 ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொறுப்பு) அப்துல் முனிர், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.