

மதுரை: "ஆவணங்கள் இல்லாமல் புகைப்படம் உள்ளிட்ட சில தகவலின் அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களில் உரிய நிவாரணம் வழங்க முடியாது" என உயர் நீதிமன்றக் கிளை கூறியுள்ளது.
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்ற கிளையில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: "பொது நல மனுக்கள் தாக்கல் செய்வோர்கள் உரிய கள ஆய்வு மேற்கொண்ட பிறகு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகளில் மனுதாரர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி, அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அவகாசம் வழங்கி, அதன் பிறகே நீதிமன்றத்துக்கு வர வேண்டும்.
பொது நல வழக்கு தாக்கல் செய்யும் மனுதாரர், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்று மனுவுடன் தாக்கல் செய்வது கூடுதல் பலமாக இருக்கும். அதைவிடுத்து புகைப்படங்கள் உள்ளிட்ட சில தகவல்களுடன் மட்டும் பொது நல மனுக்களை தாக்கல் செய்தால் உரிய நிவாரணம் வழங்க இயலாது. மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.