

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தன்று இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016டிச.5-ம் தேதி காலமானார். அவரதுமறைவுக்குப் பிறகு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின், கட்சியில் பல்வேறு மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2017-ல்நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோர் தங்கள் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தன்னை கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கியதை எதிர்த்து சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலா தொடர்ந்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கீழமை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வாதிட்டதாவது: கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் சட்டவிதிகளின்படி கூட்டப்படவில்லை.
அந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அவர்களது இஷ்டம்போல தன்னிச்சையாக உருவாக்கப்பட்டன. மற்ற நிர்வாகிகள் யாருடைய கருத்தும் கோரப்படவி்ல்லை. சசிகலா தற்போதுவரை அதிமுகவில் உறுப்பினராகத்தான் உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்தது செல்லாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது. இதை கீழமை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் ஆரம்பகட்டத்திலேயே நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு வாதிட்டார்.
அதிமுக மற்றும் பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர், ‘‘அதிமுக பொதுக்குழு கூட்டங்கள்விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டன. அந்த கூட்டங்கள் செல்லும்என்பதை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளன. அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலேயே சசிகலா கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்’’ என வாதிட்டனர்.
இதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், ‘‘அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. அந்த பதவிகளை நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுக்குழுவை எதிர்த்தும் எங்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது’’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில், சசிகலா தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தும் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்துள்ளனர். அதிமுகவில் பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரரான சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவு நாளில் சசிகலாவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.