

கடலூர்: சென்னையில் தாழ்வான இடங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற, நெய்வேலியில் இருந்து என்எல்சி இந்தியாநிறுவனம் 16 ராட்சத மோட்டார்களை அனுப்பி வைத்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் மழை நீர் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. அவற்றைஅகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுஉள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மீட்பு நடவடிக்கைக்குத் துணையாக, என்எல்சி இந்தியா நிறுவனம், நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தப்படும், உயர் திறன் கொண்ட 16 ராட்சத மோட்டார்களை அனுப்பியுள்ளது.
இந்த ராட்சத மின் மோட்டார்களுடன் சுரங்கப் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் சென்னை சென்றுள்ளனர். தண்ணீர் தேங்கிய சிக்கலானப் பகுதிகளில் தண்ணீரை விரைவாக வெளியேற்ற இந்தக் குழு உதவும் என்று என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்எல்சியில் சுரங்கம் தோண்டும்போது பெருக்கெடுக்கும் சுரங்க நீர், இந்த ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.