

சென்னை தண்டையார்பேட்டையில் குடி போதையில் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி மீது விழுந்ததால் அச்சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் அருணகிரி. இவர் தனது பேத்தி தன்யாஸ்ரீ (4) அழைத்துக் கொண்ட கடந்த ஞாயிறு இரவு 8.30 மணியளவில் வீட்டின் அருக்கில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்றுள்ளார்.
அப்போது, ஒரு வீட்டின் 2-வது மாடியில் இருந்து ஒருவர் தவறி விழுந்துள்ளார். தவறி விழுந்தவர் தன்யாஸ்ரீயின் மீது விழுந்தார். இதில் குழந்தை தன்யாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், காயம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து அவர் க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
தன்யாவுக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கால் எலும்பும் முறிந்துள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கிறார். ஆனால், குழந்தை தன்யாவின் மீது விழுந்த நபருக்கு கால் மட்டுமே முறிந்துள்ளது.
அந்த நபர் குடிபோதையில் இருந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், இபிகோ 338-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.