கோவை நகைக்கடையில் 575 பவுன் திருடப்பட்ட வழக்கு - முக்கிய குற்றவாளியை தேடி தனிப்படையினர் வெளியூர்களில் முகாம்

கோவை நகைக்கடையில் 575 பவுன் திருடப்பட்ட வழக்கு - முக்கிய குற்றவாளியை தேடி தனிப்படையினர் வெளியூர்களில் முகாம்
Updated on
1 min read

கோவை: கோவை நகைக்கடையில் 575 பவுன் நகை திருடப்பட்ட வழக்கு தொடர்பாக, தலைமறைவான முக்கிய குற்றவாளியைத் தேடி தனிப்படையினர் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் முகாமிட்டுள்ளனர்.

கோவை காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள பிரபல நகைக் கடைக்குள் கடந்த மாதம் 28-ம் தேதி அதிகாலை, ஏசி வெண்டிலேட்டர் வழியாக நுழைந்த மர்மநபர், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 575 பவுன் நகைகளை திருடிச் சென்றார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணையில், தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த தேவரெட்டியூரைச் சேர்ந்த விஜய்(25) என்பவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல் துறையினர் தேடுவதை அறிந்து அவர் தலைமறைவாகி விட்டார். மேலும், விஜய்க்கு திருட்டு சம்பவத்தில் உதவிய அவரது மனைவி நர்மதா, திருடிய நகைகளை மறைத்து வைத்த நர்மதாவின் தாயார் யோகராணி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, 525 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து, மாநகர காவல்துறையின் வடக்கு துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தலைமறைவான விஜயை தேடி வருகிறோம். அவரிடம் கைச்சங்கிலிகள், மோதிரங்கள் என 25 பவுன் நகை உள்ளது. அவரை பிடிக்க தனிப்படை காவலர்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும், மதுரை, ஆனைமலை, கோவையின் பல்வேறு இடங்களிலும் முகாமிட்டுள்ளனர்.

விரைவில் அவர் சிக்குவார். நகைக் கடையில் திருட்டு நடந்த 12 மணி நேரத்துக்குள் குற்றவாளியை அடையாளம் கண்டு அவரை நெருங்கியதால், திருடிய நகைகளை அவரது கூட்டாளிகளிடம் ஒப்படைக்க இயலவில்லை. மேலும், நகைக்கடையில் உள்ள ஏசி வெண்டிலேட்டர் வழித்தடம் குறித்து அவருக்கு எவ்வாறு தெரியவந்தது எனத் தெரியவில்லை. அவருக்கு உதவிய நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in