பங்க்-களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: நீண்ட வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள்

வில்லிவாக்கம் பகுதியில் பெட்ரோல் நிரப்ப வரிசையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள். படம்: எஸ்சத்தியசீலன்
வில்லிவாக்கம் பகுதியில் பெட்ரோல் நிரப்ப வரிசையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள். படம்: எஸ்சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் பெய்த அதிகன மழை காரணமாக பெட்ரால் பங்க்-களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்-கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. இதையடுத்து, அங்கு பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டு, பங்க் மூடப்பட்டது. சில பெட்ரோல் பங்க்-கள் திறந்திருந்த போதிலும், பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு வைக்காததால், தட்டுப்பாடு ஏற்பட்டது. சில பங்க்-களில் மட்டும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, “சில இடங்களில் பெட்ரோல் பங்க்-களில் வெள்ளம் சூழ்ந்ததால், முன்னெச்சரிக்கையாக பங்க்-கள் மூடப்பட்டன. சில இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் போதிய அளவு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது” என்றனர். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “மழை, வெள்ளம் காரணமாக சில இடங்களுக்கு லாரிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் நிலைமை சீராகிவிடும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in