

சென்னை: புறநகர் மின் ரயில் சேவையில் சென்னை - தாம்பரம் வழித் தடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒருரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக, சென்னையில் பல இடங்களில் ரயில் தண்டவாளம் மழை நீரில் மூழ்கியது. மழைநீர் தேங்கிய பகுதியில் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை நேற்று பிற்பகலில் இருந்து இயங்கத் தொடங்கியது. சென்னை எழும்பூர் – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 30 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், சென்னை கடற்கரை - திருவள்ளூர் - அரக்கோணம் வழித்தடத்தில் 30 நிமிட இடைவெளியிலும், திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு ரயிலும், வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை வழித்தடத்தில் 30 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை புதன்கிழமையும் இதே அட்டவணையில் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் கூறியுள்ளது.