Published : 06 Dec 2023 08:24 AM
Last Updated : 06 Dec 2023 08:24 AM
பொன்னேரி: பொன்னேரி அருகே வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வெள்ள நீர் அகற்றும் பணியை நேற்று அமைச்சர் பி.மூர்த்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அந்த வகையில், பொன்னேரி அருகே ஆலாடு, மனோபுரம், ஏ.ரெட்டிப்பாளையம், பிரளயம்பாக்கம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது, இந்நிலையில் அந்த ஊராட்சிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர். பி.மூர்த்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், பணிகளை விரைந்து, மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
மேலும், ஆந்திர மாநிலத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள பிச்சாட்டூர் அணையில் இருந்து, நேற்று மாலை 3.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 3,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த நீர், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் செல்லும் ஆரணி ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகவே, பொன்னேரி அருகே ஆலாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆரணி ஆற்றின் கரைப்பகுதிகள் வலுவாக உள்ளனவா? என்பது குறித்து அமைச்சர் பி.மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர், தொடர்ந்து, அவர், பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார். அக்கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வுகளின் போது, திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அரசு செயலர் ராஜாராமன், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று மழைநீர் சூழ்ந்துள்ள ஆவடி மாநகராட்சி பகுதிகளை நேரில் பார்வையிட்டு, மழைநீர் அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். அப்போது, அவர், முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கான உணவு தயாரிக்கும் கூடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் உடனிருந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகம்மது பேட்டை தோப்பு தெருவில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி நிவாரண பொருட்களை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மேலாண்மை மீட்டு குழு வீரர்கள் பத்திமாக மீட்டனர். மண்ணிவாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்தனர். மாங்காடு பிரதான சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால், நிவாரண பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனகாபுத்தூர் அடையாறு ஆற்றுப் பாலத்தின் மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ள பெருக்கால் வடக்கால் கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள படகு மூலம் மக்கள் வந்து செல்கின்றனர். கூடுவாஞ்சேரி அருள் நகரில் ஆற்றுப்பாலம் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள் மீண்டும் தீவாக மாறியுள்ளன. மீட்புப் பணிகளை துரிதமாக செயல்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தவர்களை, தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் மூலம் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். அங்கு மக்களுக்கு தேவையான உடை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மாநகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சக்கரபாணி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி. சமய மூர்த்தி, ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி அருகே கடும்பாடி மற்றும் பூஞ்சேரி ஏரிகளில் ஏற்பட்ட உடைப்பால், மழை வெள்ளம் மொத்தமாக ஈசிஆர் சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டது. இதில், மழைநீர் வெளியேறுவதற்காக சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்து கால்வாயில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைந்தது. மேலும், சாலையின் மீது முழங்கால் அளவுக்கு மழைநீர் ஆர்ப்பரித்து சென்றதால், மாமல்லபுரம் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீஸார் சாலையில் பேரிகார்டர் அமைத்து வாகன போக்குவரத்தை நிறுத்தினர். கிழக்கு கடற்கரை சாலையில் 2-வது நாளாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சேதமடைந்த சாலையை மாவட்ட எஸ் பி. சாய்பிரனீத் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். மேலும், இருசக்கர வாகனம் உள்ளிட்ட சிறியஅளவிலான வாகனங்களை அனுமதிக்க முடியுமா என சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளிடம்கேட்டறிந்தார். சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 262 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளதாகபாலாறு கீழ்வடி நிலக்கோட்டம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 784 ஏரிகள் நிரம்பியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT