

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே சென்னை பேரிடர் மீட்பு பணிகளுக்கு சென்ற நகராட்சி ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தஞ்சாவூர், என். கே. நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் மூர்த்தி (50). இவர் ராஜபாளையம் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் விருதுநகரைச் சேர்ந்த சக துப்புரவு ஆய்வாளர் பழனி குரு (54) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு பேரிடர் மீட்பு பணிக்காக சென்னைக்கு ஜீப்பில் சென்றார்.
ஜீப்பை விருதுநகரைச் சேர்ந்த ஓட்டுநர் முருகானந்தம் (41) என்பவர் ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை அருகே வரும் போது ஜீப் நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக சாலை ஓரமாக இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த ஜெயபால் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பழனி குரு, முருகானந்தம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இத்தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.